Friday, October 24, 2008

நானும் என் வார நாட்களும்!

தொடர்ந்து நாம் சந்தோசமாய்
இருக்க நினைப்பதை
ஏன் தான் இந்த
வார நாட்கள் தின்று தீர்க்கிறதோ?

ஓரிரு தினங்களை உன்னுடன்
கழித்த மகிழ்ச்சி எனை சில நேரங்களில்
ஆர்ப்பரித்துச் சென்றாலும்.....
ஏதோ ஒரு வெறுமை உணர்வில் மனசு
உறைந்த படியே!

தூக்கம் என் கண்களை
தழுவிச் செல்ல..
கனவிலும் என் பார்வைகள்;
உன்னில் பதிந்ததாகத் தானே?

உள்ளுக்குள் ஒரு குமைச்சல்...
உள்ளத்தில் ஒரு எரிச்சல்...
புரியவில்லை ஏனென்று?

ஒன்றாய் விழித்து
ஒன்றாய் குளித்து....
ஒன்றாகவே சாப்பிட்டு..
பஸ் நிலையம் வரை வருவாயே?

வாகனப் புகைச்சல்
உன்னை மூச்சு முட்டச் செய்தாலும்
எனை வழியனுப்பி விட்டு நீ
கையசைக்கும் போது...
இதயம் மிக கடுமையாக
வலிப்பது பற்றி உனக்குத் தெரியுமா?

ஓர் புள்ளியாய் நீ மறைந்து போகும் வரை...
கண் சிமிட்டாமல்
உனையே நான் பார்த்துக் கொண்டிருப்பது
பற்றி அறிய மாட்டாய் நீ!!!

உன் மார்புக்குள் முகம் புதைத்து
நான் தூங்கும் தூக்கத்தில் தான்....
என் அத்தனை புலம்பல்களும் கவலைகளும்
தீர்ந்து போகின்றன!

புது யுகம் காண...
புது வழி காட்டிய உனைப் பிரிந்து
நானிருக்கும் ஏழெட்டு மணித்தியாலங்களை
நினைத்தால்.......தான்
வார நாட்களை கொஞ்சமும்
பிடிப்பதில்லை எனக்கு!!!!

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

சாத்தான்கள் சாட்சி சொல்கின்றன!

நான் மூளையை கழற்றிப் பார்க்கின்றேன்!
அதன் அறைகளுக்குள்ளே..
குட்டிச் சாத்தான்கள் ஓடிப் பிடித்தும்
ஒளிந்து திரிந்தும் விளையாடிய வண்ணமாக!

என் நுரையீரலை நோக்கிக் குனிகிறேன்
கசப்பான அனுபவங்ஙளால் குப்பை படிந்த நிலையிலே அது!

குடல்களை மாலை செய்து போட்டு
ரசிக்க முற்படுகையில் எனை ஏமாற்றியவர்களின்
வார்த்தை விஷம் அதில் வழிந்த படியே!
செவிகளிரண்டை ஆராய்கிறேன்.

செய்திடாத தவறுகளுக்காய்
தந்த சன்மானங்கள் சதாவும் எதிரொலித்து
வதைத்துக்கொண்டே தான்!

எனை சூழவுள்ளவர்களின் சுவாசக்காற்றினை
ஊள்ளீர்க்கிறேன்!
நரமாமிச வாடை எனை நடுநடுங்கச் செய்கிறது!

என் கண்கள் எனைப் பார்த்து
ரகசியம் சொல்கிறது...
மனிதனின் மனம் சமாதியாகி
வெகு காலம் என்று!

அப்போது என் இதயம் மட்டும்
பரிதாபமாக எனை நோக்கி தலை திருப்புகிறது
ஓ..........
அதற்குத்தான் என்னால்
எத்தனை ஏமாற்றங்கள்!!!!


தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

புதைகுழி நோக்கிய புறப்படல் ஒன்று!

சற்று தாமதப்படுங்கள்
எனை மணவரைக்கு அழைத்துச் செல்ல
உத்தேசமா?
கொஞ்சமே கொஞ்சம் என்
மன அறையை உற்று நோக்குங்கள்!

கடந்து போன என் காதலின்
கால் தடங்கள் புரிகிறதா?
உதிரம் போல என் உடலெங்கும் ஊடுறுவி விட்ட
உணர்வுகள் தெரிகிறதா?

அவன் ஸ்வாசத்தால் வாசம் தடவி வைத்திருக்கிறேன்
அதை விஷம் என்றா நச்சரிக்கிறீர்கள்?

என் கழுத்தோடு கை கோர்த்து சிரிக்கிறானே
இந்த மாலை கட்டாயம் தேவை தானா?
கரங்களை பற்றி இழுக்கும் போது..
வளையல்களுக்கு இங்கென்ன வேலை?

கூரைச்சீலை!!!!

அவன் நினைவுகளை முழுசாய்
போர்த்தியிருக்கும் போது
இது அவசியமில்லை அகற்றுங்கள!;

உதடு கன்னம் கண் என அழுகையால்
சிவந்திருக்க..
உதட்டுச் சாயம் மட்டும் எதற்கு?

ம்;ம்….இப்போது அழைத்துச் செல்லுங்கள்
அந்த ம(ர)ண அறைக்கு!!தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

யாரை குற்றம் சொல்வதோ?

முதன் முதலாய் என்னில் துளிர்த்திட்ட
நேசத்தை....மறைமுகமாய் உதிர்த்திட்டேன்
நெஞ்சில் வைத்து பாசத்தை!!

உன் முகம் ரசித்து க
ழுத்தில் முகம் புதைத்து
மார்பு முடி அளைந்து...
கவலைகள் கலைந்து
அன்புப் பார்வையில் கரைந்து போகத்தானே எண்ணியிருந்தேன் உள்ளுக்குள்????

யாரோ ஒருத்தி உனை எண்ணியே வாழ்வதாய்
பிதற்றுகிறாய் நீ !!!;

வாழ்கிறாள் தானே?

ஆனால்........ ஆனால் நான்
எல்லோருமிருந்தும் யாருமற்றவளாய்
உனை எண்ணியே அனுதினமும்
செத்துப் போகிறேனே.?

இந்த ஜீவமரணப் போராட்டம்
நீ உணர நியாயமில்லை தான்!!!

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

பற்றி எரிகிறதே நம் பலஸ்தீனம்!

ஏய் ராட்சசிப் பெண்ணே!
நான் மட்டுமா..?

நீயென்று நான் அணைத்துத்
துயிலும் தலையணை கூட என்
கண்ணீரை அதிகம் பருகியதால்
கண்ணதாஸனாகிப் போனது!

என்னை விட்டு பிரிந்து செல்லத்
தெரிகிறது தானே.....?
ஏன் கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடிவதில்லை
உன்னை ஏந்தியுள்ள என் இதயம்
படும் பாட்டை?

சிந்திக்காமல் நீயும் நானும்
சந்தித்து முத்தித்துக் கொண்ட
நிலவுப் பொழுதுகளின்.....
நினைவுப் பொழுதுகளை......
இப்போதேனும் மீட்டிப்பார்
பற்றி எரிகிறதே நம் பலஸ்தீனம் போல.....!!!!


தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

Friday, October 10, 2008

கனவுகள் பொய்த்த ராத்திரிப் பொழுது !

எரிச்சலில் இதயம் எரிகிரது
என் விதி கொண்ட
அன்பைப்பற்றி
கொஞ்சம் கொஞ்சமாக
எனக்கும் புரிகிறது!

உன் முத்தங்கள்
முள்ளாய் வலிக்கிறது..
சுவாசக் காற்று கூட
என்னைச் சுட்டு எரிக்கிறது!

மூளையைக் கொத்திவிட்டுப் போகிறதே
நரமாமிசம் திண்ணும்
நாகப் பாம்பொன்று!

மொட்டை மாடியிலே
தன்னந்தனியாக
நான் உலாவரும்போது
விலா துடிக்க வைத்திற்றே
உன் விசவசனங்கள்!

கடின பிரயாசை கொண்டு
இன்பங்களை மட்டும்
வருவிக்கப்பார்க்கிறேன்
ஆனால்
உயிரின் இழை அறுந்தபடியே..
மரணத்தின் கோரவெம்மை
கைநீட்டி அழைக்கிறதென்னை!

கனவுகள் பொய்த்துப்போகிற
ராத்திரிப் பொழுதுகளில் துளிர்க்கும்
உன் மீதான சுகானுபவங்களை
முளையிளே வெட்டியெறிந்து
எள்ளிநகையாடிவிட்டு சிரிக்கிறது
என்னைப்பார்த்து என் ஜீவிதம்!!

மண்டை ஓடும் இரத்தக்கசிவும்!

உன் இதயத்தை
பூங்கா என்றல்லவா எண்ணியிருந்தேன்
முற்றும் முழுதாக
கள்ளிச்செடி இருப்பதுபற்றி தெரியாமல்....

என் மண்டையோட்டு
இரத்தக்கசிவுகளிலும்
உன்னால் மறக்கப்பட்ட நிகழ்வுகளிலும்
நிறைந்து வழிகின்றன
நான் கண்ட ஏமாற்றங்கள்!

என் அன்பென்ற
புண்ணிய ஸ்தலத்தை
எச்சம் செய்து போன காகம் நீ !

பொய் மட்டுமே பூசப்பட்டிருந்த
காட்சி சித்திரத்தின்
முழு உரிமையும் உனக்குத்தான்!

என் மௌன இரட்சிப்புகளால்த்தான்
நான் இன்னும் உயிர் வாழ்வதாய்
காதோரம் சொல்லிப் போயிற்று
பெருங்குரலெடுத்து ஆந்தை ஒன்று!

Tuesday, September 23, 2008

ஊசலில் ஓர் உயிர்

புலம்பெயர்ந்துவிட்டன இறந்தகால நினைவுகள்
ஓநாய்களின் குதர்க்கங்களினால்
மிரண்டிருக்கிறது அந்தகார நினைவுகள்
கண்திறந்தும் நினைத்ததை கூறிடாமல்
தவிர்க்கும் பிணவுடல் போன்றே
என் முடிவும் ஆகிடுமோ என்ற பிதியில்
சாகிறது ஆத்மா
சிற்சில நேரங்களில் மாத்திரம்
எனை ரௌத்திரமாய்
தரிசிக்கும் இரத்தம் வெளியேறிய பழங்கால நினைவுகள்
எதிர்காலத்தையும் கரடு முரடாய்க்காட்டி
சீவனை நடுங்கச் செய்கிறது…

பேய் பிசாசுகளின் ஊர்வலங்களில்
புலவந்தமாய் நானும் எடுத்தச்செல்ல
படுக்கையில் எனையறுத்துப்பலியிட
கூரிய பற்கள்
அங்கே பயமுறுத்தியபடி
கொடிய இராஜாளியின் கால்களுக்கிடையில்
சிக்கிய ஒரு புறாக்குஞ்சு போல
என் உணர்வுகளுடன் உணர்ச்சிகளும்
மண்டியிட்டு புதைந்தபடிக்கு
மெதுமெதுவாக கசிந்து போகிறது உயிரின் துளிகள்.
--------------------------------------------------------------
தியத்தாலாவ எச்.எப்.ரிஸ்னா

உடன்பாடுகள்

நான்….
உன்னுடையவளாகப்போகும்
நளை எண்ணியெண்ணியே இதயம் பலமிழந்து
விட்டதாய் ஓர் உணர்வு.

வருடங்கள் காத்திருக்க தெரிந்த
எனக்கு..நாளிகைகளை சமாளிப்பதுதான்
காயங்கள் தோறும் உப்பால்
கழுவது போலிருக்கிறது.

அரிதாக முதலில் நான்
கொண்டிருந்த கற்பனைகள் யாவுமே
பேரிதாக எனை தன்னுலகுக்குள்
அழைத்தச் செல்கிறே.

சொல்வாக்கு தவறாத
உன் குணம் கண்டதாலோ என்னவோ
செல்வாக்கை குறைவின்றி
பெற்றுவிட்டாய் என்னிடத்தில்..
கற்கண்டை சாப்பிட்டாற்போல காதல்
சொற்கொண்டு நீ போகையிலே..
ஆனந்த அருவியின் அலை வந்து
மோதுகிறது உள்ளத்தில்
முரண்பாடுகளின் தடயங்கள்
ஆழிந்துபோன அன்பொன்றில்
கட்டுப்பட்டிடத் தான்
என் உயிருக்குள்
உடன் பாடுகள் அதிகமாக…
--------------------------------------------------------------
தியத்தாலாவ எச்.எப்.ரிஸ்னா

Monday, September 22, 2008

இதயமும் பழஞ்செருப்பும்!

வாழ்க்கை மீதான ஆவல்
கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து போகிறது..

யாரையும் பிடிக்கவில்லை
ஏமாந்தே மாய்ந்து போகும்
என்னையும் எனக்குப்
பிடிக்கவேயில்லை!

சேற்றில் முளைத்த செந்தாமரைக்கு
உள்ள மதிப்பு.......
சாலையோரப் பூக்களுக்கு இல்லை தானே?

வெறுமையாய் இருக்கும் போது கூட
இப்படி இதயத்தில் வெம்மை
பரவியதில்லை..!
அனுபவங்கள் ஆயிரம!;

என்றாலும்....
திருந்தாத என் இதயத்தை தான்
தேய்ந்த பழஞ் செருப்பால்
நாலு சாத்து சாத்த வேண்டும்!!!!
---------------------------------------------------------
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

பூமி திண்ணும் பூதம் பற்றி...

சில பெருத்த தலைகளின்
மலட்டு ஆவல்களினால்
என் எதிர்காலமெனும் குழந்தை இன்னும் ஜனனிக்கவேயில்லை!

காலுடைந்த கிழட்டுப் புலியின் ஏக்கம்
போலவே இன்னும் அடைய முடியவில்லை
என் இலக்குப் பட்சியை!

சருகாய் போன சானத்துக்கிருக்கும்
மதிப்பு கூட துளியும் இன்றி
என் வானம் இருட்டாகத் தான் எப்போதும்!

சதாவும் ஆழ்மனசிலே எரிமலையின்
குமுறல்கள்...
பூகம்பம் ஓய்வெடுத்துக் கொண்டு
என் மூளையை சுற்ற விட்டு
வேடிக்கை பார்ப்பதாய் ஓர் பிரமை....

தேர்தல் கால அரசியல் வாதியாய்
தோன்றி மறையும் சில சந்தோஷங்கள்!

உலகமே எனக்கெதிராய்
சதி செய்து விட்டு......
பலியை விதிமேல் இட்ட உணர்வொன்று!

என் பூமியை இப்போதெல்லாம்......
ஓர் பூதம் விழுங்கிய படியே!
எனினும்......
எதிலோ ஆர்வம் கொண்டு
என் ஆன்மா இன்;னும் வாழ்வதற்கு
பூஜித்துக் கொண்டே..!!!
--------------------------------------------------
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

Sunday, August 17, 2008

இதயத்தின் முகவரிகள்

உன் அன்பெபனும் ஆலையிலே
நித்தமும் சாரு பிழியப்படும் கரும்பல்லவா
நான்
அப்படியே காதலுடன் எனை
ருசி பார்த்து மகிழும் எறும்பல்லவா நீ.

உனக்காக போருக்கு செல்ல
வேண்டும் என்றால் கூட வலித்திருக்காது
உனை விட்ட ஊருக்க செல்வதை
நினைத்தால் இதயம் சல்லடையாகிறது.

எப்படியிருப்பேன்??
என் கண்ணீர் துடைக்க உன்
கைகள் அங்கில்லை….
எனக்கு முத்தத்துடன் தலை தடவ
யார் இருக்கிறார்?
நான் வலி கண்டாலும் பொருட்படுத்த
நீயிருக்க மாட்டாயே?

சாப்பிடாத தருணங்களில் அன்பு
இழையோடும் உன் கடுமையை
யாரிடம் எதிர்பார்ப்பேன் ம்ம்??
உன் மார்ச்சூட்டை பெறுவதெப்படி?
ஏன் இடுக்கைகளும் இரவிலெல்லாம்
உனை அணைக்க ஏங்கிடாதா?
அப்போது நீயிருக்க வில்லை எனில்
எந்நிலை எப்டியிருக்குமோ?


நிமிடந்தோறும் உன் திருமுகம்
இதயக் கண்ணாடியில் வந்தாடுமோ…
அத்தருணங்களில் தனிமை என்னை
பிடித்து பந்தாடுமோ?
என் இதயத்தின் முகவரிக்குள்..
உனை பற்றின வரிகள்தானே
சதாவும் எதிரொலிக்கம் உயிரே.
-----------------------------------------------------------------
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

மனங்கவர் மணவாளன்

கலங்காதே காரிகையே
காதலுடன் உனைக் காப்பாற்ற
காளை ஒருவன் வராமலா
போய் விடுவான்?

யாருக்க யார் என்று வல்லவன்
என்றோ எழுதி விட்டான் அன்று?

தூய காதலின் நிமித்தம் நீ
தூக்கி எறிந்தவற்றை பற்றி
கவலைப் படாதே.

வீண் கற்பனைகளிலிருந்து மீண்டு வா….
உன் இதயத்தையும் உன்னையும்
உயிருக்குயிராய் நேசிக்க ஒருவன்
வருவான்.

பத்தினியே, நீ பாசத்துடன்
பழகியவனோ உன்னை அடைய
கொடுப்பனமில்லாதவன்...
சீதனத்தாகம் பிடித்த அவன்
சுயரூபத்தை மாங்கல்யத்தின்
முன்னெறிந்த நீ அதி;டக்காரி.

கண்ணகியே, உன் உள்ளம்
கவர வருவான் ஒரு அற்புதமானவன்
உன்னிடம் காதல் பாடம் பயில
வரப்போகும் அவன் உன் ஆசை மாணவன்.

உத்தமி நீ இன்ற வரையிலும்
உண்மையுடனிருப்பதால்
உலகமே வியக்குமளவு உனை
காத்திட வருவான் ஒருவன்
ஆம்
மிக மிக சீக்கிரமே வந்து
உன்னை தனதாக்கிக்கொள்வான்
உன் தலைவன்..
-----------------------------------------------------------------
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

கருகிப்போன மனசாட்சி

எதிர்பார்ப்புக்கள் எல்லாம்
எமாற்றத்தில் நிறைவுறும்போது
எதிலும் நாட்டமில்லாமல்
வேலை நிறுத்தம் செய்கிறது இதயம்.

அன்பு வார்த்தைகளுக்கும்
ஆசை முத்தங்களுக்கும் மனதில்
உற்சாகம் கொண்டுதானே
ஓடி வந்தேன்…உனை தேடி
வந்தேன்.

நாடுகளுக்கிடையிலான சில பேச்சுவார்த்தை
ஒப்பந்தங்கள் போன்றே
தவிடு பொடியாகி விட்டன என்
கனவுகளும்… பயணம் முழுவதிலும்
நான் உனைபற்றி மட்டுமே ஏந்தி
வந்த நினைவுகளும்.

பிறரை சந்தோஷப்படுத்த நீ
நினைக்கலாம்….எனினும்
உன் மீது எனக்க சந்தேகம் துளிர்க்கிறதே?

சுடு காடொன்றிலே….
வேந்து தகிக்கம் பிரதேசங்கள்
போன்றே கருகித்தான் போய்விடுகிறது
சில நேரம்
என் மனசாட்சியம்.
-----------------------------------------------------------------
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

எனை ஆளும் என் தேவதைக்கு

யுகங்களாய் வருத்தும்
ஓவ்வொரு நிமிடமும்
ஊன் அன்பினை தவிர
ஞபகங்கள் ஏதமில்லை.

வேலைத்தளத்திலும் போராட்டங்கள்
ஆயிரம் தான் -எனினும்
இதயத்தின் அடித்தளத்தில் நீயமர்ந்து
எனை உற்சாகப்படுத்துகிறாய்.

கூண்டிலிருந்து விடுபட்ட கிளியாய்
உனை காண மாலை வேளை
ஓடி வருகிறேன்...
காலைகளில் மட்டும் சிறகுடைந்த
குருவியாய் வாடி விடுகிறேன்.

எனை ஏற்றவளே
எனக்கு ஏற்றவளே
பருவத்தவிப்பில் பரிதவித்த எனக்கு
பக்குவமாய் விளக்கினாய்
பழி சொல்லும் உலகம் பற்றி.

தடுமாற்றம் கண்ட என் இதயத்துக்கு
தடம் மாறிடாதபடி
அறிவுரை தந்தாய்.

என் வாழ்க்கை பயணத்தை
விபத்தில் வீழ்த்திடாமல் சரியாக
வழி நடத்தக்கூடிய சாரதி நீதானம்மா.

ஏன் மேல் காட்டும் எஉன்
புனித நேசத்திற்கு..
ஏன் ஆயுள் முழுக்க நான்
உனக்கு மட்டும் சொந்தமடி
சகியே.
-----------------------------------------------------------------
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

எனக்கு பிடித்த உன் நேசம்

காதலுக்கு தடையாயிருக்கும்
கடிகாரம் மீது
கடும் கோபம் எனக்கு.

இரவெல்லாம் கதைபேசி
அதிகாலையிலும் தழுவுவாயே
அந்த சுகத்தில் தேநீர்
கூட தேவையிராது எனக்கு.

பசி மறந்து அலுவலாயிருக்கும்
சமயம் பார்த்து ஊட்டி விடும்
என் நேசம் ரொம்பவும் பிடிக்கும்.

குளித்து முடித்தபின்
துலை துவட்டி விடும் உன் சேலை ..
அது என் உயிரின் கவசம்.

என் துணிகளும் துவைத்த
வாய்க்கு ருசியாய் சமைத்து
என் வருகைக்காய் காத்திருப்பாயே...

அந்த எதிர்பார்ப்பில் கவலையையும்
இன்பத்தையும் ஒன்றாகவே அனுபவித்திருக்கிறேன்.

என் கண்ணீரையும் துடைத்துவிடும்
உன் கைகளுக்க முத்தத்தால்
வளையல் செய்து போட வேண்டும்

ஆறாத என் இதய ரணங்களையும்
ஒரே புண்ணகையில் தடவிவிடும் போது
தழும்புகளின் தடங்கள் கூட
மறைந்து போகும் தெரியுமா?

உடலாலும்
மனதாலும் நான் சந்தோஷிக்க
வேண்டுமென்ற உன்
சதா ப்ரார்த்தனையால் தான்
நான் இன்னமும் வாழ்கிறேனோ என்னவோ???
-------------------------------------------------------------------------------
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா