Friday, October 24, 2008

நானும் என் வார நாட்களும்!

தொடர்ந்து நாம் சந்தோசமாய்
இருக்க நினைப்பதை
ஏன் தான் இந்த
வார நாட்கள் தின்று தீர்க்கிறதோ?

ஓரிரு தினங்களை உன்னுடன்
கழித்த மகிழ்ச்சி எனை சில நேரங்களில்
ஆர்ப்பரித்துச் சென்றாலும்.....
ஏதோ ஒரு வெறுமை உணர்வில் மனசு
உறைந்த படியே!

தூக்கம் என் கண்களை
தழுவிச் செல்ல..
கனவிலும் என் பார்வைகள்;
உன்னில் பதிந்ததாகத் தானே?

உள்ளுக்குள் ஒரு குமைச்சல்...
உள்ளத்தில் ஒரு எரிச்சல்...
புரியவில்லை ஏனென்று?

ஒன்றாய் விழித்து
ஒன்றாய் குளித்து....
ஒன்றாகவே சாப்பிட்டு..
பஸ் நிலையம் வரை வருவாயே?

வாகனப் புகைச்சல்
உன்னை மூச்சு முட்டச் செய்தாலும்
எனை வழியனுப்பி விட்டு நீ
கையசைக்கும் போது...
இதயம் மிக கடுமையாக
வலிப்பது பற்றி உனக்குத் தெரியுமா?

ஓர் புள்ளியாய் நீ மறைந்து போகும் வரை...
கண் சிமிட்டாமல்
உனையே நான் பார்த்துக் கொண்டிருப்பது
பற்றி அறிய மாட்டாய் நீ!!!

உன் மார்புக்குள் முகம் புதைத்து
நான் தூங்கும் தூக்கத்தில் தான்....
என் அத்தனை புலம்பல்களும் கவலைகளும்
தீர்ந்து போகின்றன!

புது யுகம் காண...
புது வழி காட்டிய உனைப் பிரிந்து
நானிருக்கும் ஏழெட்டு மணித்தியாலங்களை
நினைத்தால்.......தான்
வார நாட்களை கொஞ்சமும்
பிடிப்பதில்லை எனக்கு!!!!

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

சாத்தான்கள் சாட்சி சொல்கின்றன!

நான் மூளையை கழற்றிப் பார்க்கின்றேன்!
அதன் அறைகளுக்குள்ளே..
குட்டிச் சாத்தான்கள் ஓடிப் பிடித்தும்
ஒளிந்து திரிந்தும் விளையாடிய வண்ணமாக!

என் நுரையீரலை நோக்கிக் குனிகிறேன்
கசப்பான அனுபவங்ஙளால் குப்பை படிந்த நிலையிலே அது!

குடல்களை மாலை செய்து போட்டு
ரசிக்க முற்படுகையில் எனை ஏமாற்றியவர்களின்
வார்த்தை விஷம் அதில் வழிந்த படியே!
செவிகளிரண்டை ஆராய்கிறேன்.

செய்திடாத தவறுகளுக்காய்
தந்த சன்மானங்கள் சதாவும் எதிரொலித்து
வதைத்துக்கொண்டே தான்!

எனை சூழவுள்ளவர்களின் சுவாசக்காற்றினை
ஊள்ளீர்க்கிறேன்!
நரமாமிச வாடை எனை நடுநடுங்கச் செய்கிறது!

என் கண்கள் எனைப் பார்த்து
ரகசியம் சொல்கிறது...
மனிதனின் மனம் சமாதியாகி
வெகு காலம் என்று!

அப்போது என் இதயம் மட்டும்
பரிதாபமாக எனை நோக்கி தலை திருப்புகிறது
ஓ..........
அதற்குத்தான் என்னால்
எத்தனை ஏமாற்றங்கள்!!!!


தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

புதைகுழி நோக்கிய புறப்படல் ஒன்று!

சற்று தாமதப்படுங்கள்
எனை மணவரைக்கு அழைத்துச் செல்ல
உத்தேசமா?
கொஞ்சமே கொஞ்சம் என்
மன அறையை உற்று நோக்குங்கள்!

கடந்து போன என் காதலின்
கால் தடங்கள் புரிகிறதா?
உதிரம் போல என் உடலெங்கும் ஊடுறுவி விட்ட
உணர்வுகள் தெரிகிறதா?

அவன் ஸ்வாசத்தால் வாசம் தடவி வைத்திருக்கிறேன்
அதை விஷம் என்றா நச்சரிக்கிறீர்கள்?

என் கழுத்தோடு கை கோர்த்து சிரிக்கிறானே
இந்த மாலை கட்டாயம் தேவை தானா?
கரங்களை பற்றி இழுக்கும் போது..
வளையல்களுக்கு இங்கென்ன வேலை?

கூரைச்சீலை!!!!

அவன் நினைவுகளை முழுசாய்
போர்த்தியிருக்கும் போது
இது அவசியமில்லை அகற்றுங்கள!;

உதடு கன்னம் கண் என அழுகையால்
சிவந்திருக்க..
உதட்டுச் சாயம் மட்டும் எதற்கு?

ம்;ம்….இப்போது அழைத்துச் செல்லுங்கள்
அந்த ம(ர)ண அறைக்கு!!



தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

யாரை குற்றம் சொல்வதோ?

முதன் முதலாய் என்னில் துளிர்த்திட்ட
நேசத்தை....மறைமுகமாய் உதிர்த்திட்டேன்
நெஞ்சில் வைத்து பாசத்தை!!

உன் முகம் ரசித்து க
ழுத்தில் முகம் புதைத்து
மார்பு முடி அளைந்து...
கவலைகள் கலைந்து
அன்புப் பார்வையில் கரைந்து போகத்தானே எண்ணியிருந்தேன் உள்ளுக்குள்????

யாரோ ஒருத்தி உனை எண்ணியே வாழ்வதாய்
பிதற்றுகிறாய் நீ !!!;

வாழ்கிறாள் தானே?

ஆனால்........ ஆனால் நான்
எல்லோருமிருந்தும் யாருமற்றவளாய்
உனை எண்ணியே அனுதினமும்
செத்துப் போகிறேனே.?

இந்த ஜீவமரணப் போராட்டம்
நீ உணர நியாயமில்லை தான்!!!

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

பற்றி எரிகிறதே நம் பலஸ்தீனம்!

ஏய் ராட்சசிப் பெண்ணே!
நான் மட்டுமா..?

நீயென்று நான் அணைத்துத்
துயிலும் தலையணை கூட என்
கண்ணீரை அதிகம் பருகியதால்
கண்ணதாஸனாகிப் போனது!

என்னை விட்டு பிரிந்து செல்லத்
தெரிகிறது தானே.....?
ஏன் கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடிவதில்லை
உன்னை ஏந்தியுள்ள என் இதயம்
படும் பாட்டை?

சிந்திக்காமல் நீயும் நானும்
சந்தித்து முத்தித்துக் கொண்ட
நிலவுப் பொழுதுகளின்.....
நினைவுப் பொழுதுகளை......
இப்போதேனும் மீட்டிப்பார்
பற்றி எரிகிறதே நம் பலஸ்தீனம் போல.....!!!!


தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

Friday, October 10, 2008

கனவுகள் பொய்த்த ராத்திரிப் பொழுது !

எரிச்சலில் இதயம் எரிகிரது
என் விதி கொண்ட
அன்பைப்பற்றி
கொஞ்சம் கொஞ்சமாக
எனக்கும் புரிகிறது!

உன் முத்தங்கள்
முள்ளாய் வலிக்கிறது..
சுவாசக் காற்று கூட
என்னைச் சுட்டு எரிக்கிறது!

மூளையைக் கொத்திவிட்டுப் போகிறதே
நரமாமிசம் திண்ணும்
நாகப் பாம்பொன்று!

மொட்டை மாடியிலே
தன்னந்தனியாக
நான் உலாவரும்போது
விலா துடிக்க வைத்திற்றே
உன் விசவசனங்கள்!

கடின பிரயாசை கொண்டு
இன்பங்களை மட்டும்
வருவிக்கப்பார்க்கிறேன்
ஆனால்
உயிரின் இழை அறுந்தபடியே..
மரணத்தின் கோரவெம்மை
கைநீட்டி அழைக்கிறதென்னை!

கனவுகள் பொய்த்துப்போகிற
ராத்திரிப் பொழுதுகளில் துளிர்க்கும்
உன் மீதான சுகானுபவங்களை
முளையிளே வெட்டியெறிந்து
எள்ளிநகையாடிவிட்டு சிரிக்கிறது
என்னைப்பார்த்து என் ஜீவிதம்!!

மண்டை ஓடும் இரத்தக்கசிவும்!

உன் இதயத்தை
பூங்கா என்றல்லவா எண்ணியிருந்தேன்
முற்றும் முழுதாக
கள்ளிச்செடி இருப்பதுபற்றி தெரியாமல்....

என் மண்டையோட்டு
இரத்தக்கசிவுகளிலும்
உன்னால் மறக்கப்பட்ட நிகழ்வுகளிலும்
நிறைந்து வழிகின்றன
நான் கண்ட ஏமாற்றங்கள்!

என் அன்பென்ற
புண்ணிய ஸ்தலத்தை
எச்சம் செய்து போன காகம் நீ !

பொய் மட்டுமே பூசப்பட்டிருந்த
காட்சி சித்திரத்தின்
முழு உரிமையும் உனக்குத்தான்!

என் மௌன இரட்சிப்புகளால்த்தான்
நான் இன்னும் உயிர் வாழ்வதாய்
காதோரம் சொல்லிப் போயிற்று
பெருங்குரலெடுத்து ஆந்தை ஒன்று!