Thursday, May 14, 2009

மனித நேயம்

மரணித்துப் போய் விட்ட பின்
அதனை உயிர்பிப்பதென்பது எவ்வாறு?
காலப் பேரலை என்னையும் தான்
மாற்றிப் போட்டு விட்டதே?
நான் மட்டுமென்ன விதிவிலக்கா?
வியர்வையும் தன்
நாசியை மூடிக்கொள்ளும் படியான
சனக்கூட்டம் அங்கே...
தொண்டையில் நீர் வற்றினாலும்
எங்கிருந்து தான் வந்ததோ தெரியவில்லை
~சீட் பிடிக்கும் தைரியம் மட்டும்!
முன்பெல்லாம் மனசிலாவது
இடமிருந்தது.....
இப்போது மருந்துக்கும்
அது இல்லை.
பருவ வயதுப் பெண்ணும்
தள்ளாடும் கிழவியொருத்தியும்
கால் கடுக்க நின்றவாறங்கே
பஸ்ஸ{க்குள்!
யாருக்கு இடம் தரலாம்???
சபலப் புத்தி எனை கட்டிப் போடுகிறது!
நியாயம் இடையில் அடிபட்டு
செத்ததால்...வாக்கு வாதமே
க்ரீடம் சூட்டிக் கொள்கிறது!
கிழவிக்காக நான் இளகினாலும்
ஏதோ ஒன்று மனசை
முறுக்கிக் கட்டிக் கொண்டே!
உணர்ச்சிகளின் கொந்தளிப்பில்
மனசாட்சி எரிந்து சாம்பலாயிற்று...!
இளமையின் பிடிகளுக்கிடையில்
மோட்சத்தைப் பற்றி
எங்கே நினைப்பேன்?
அப்போது....அதோ...
பருவ வயதுப் பெண்ணுக்கு
ஆசனம் அங்கே அதிஷ்டவசமாய்!
ஸ்ருதியிழந்த பாடலானேன்!
இப்போது எந்த சலனங்களும்
இல்லை தான்....
எனினும்
கிழவிக்கு இடம் தர மறுத்த
அந்த ஏதோ ஒரு அவஸ்தை
மெதுவாக.... மிக மெதுவாக.....
அடங்கிப் போகிறது!!!

No comments: