Thursday, May 14, 2009

சூறாவளிக் காதல்...!

தூரே இருந்தபோது...
வார்த்தைகளில் கூட காதல்
தூவானம் பொழிந்தது!
அருகில் வந்தபிறகு...
அனைத்தும் மாறி காதல்
எனைப்பார்த்து
தூவென காறித்துப்புகிறது!
யாரிடமிருந்தும்
சந்தோசங்களைப் பறிக்கவில்லை - நான்
ஒருபோதும் காதலின் பெயரால்
வேசமும் தரிக்கவில்லை!
சூழ்ச்சிகள் செய்து ஒருநாளும்
நேசம் கொள்ளவில்லை - எனினும்
என் காதல் உள்ளம் சதாவும்
வீழ்ச்சி காண்பதுபற்றியும் தெரியவில்லை!
எதுகையும் மோனையுமாய் இருந்த
நம் காதல் இன்று
முன்னுக்குப் பின் முரணாகுவதை
அறிந்தவள் நான் மட்டுமே!
தீபாவளியாய் சந்தோசம் கண்ட
என் உள்ளத்தில் தற்போதெல்லாம்
சூறாவளி பயங்கரமாய் சுழன்றடித்தபடி!
அன்று
காவலனாயிருந்த கோவலன்
கேவலனாகிவிட்டான்...
இன்று
அன்பாய் பழகிட்ட நானும்
வம்பாகிப்போனேனோ?
நம்பி வந்த சொந்தமெல்லாம்
என்ன ஆனதோ...?
எல்லாமே எனை ஏமாற்றி
மண்ணாய்ப் போனதோ..?
திகட்டிக் கொண்டிருந்த
என் பிஞ்சு உள்ளத்தில்
இப்போதெல்லாம் ஏதோ
ஒன்று தெவிட்டியபடியே!
நாவினால் சுட்ட வடு... ஒரு
நாளிலும் மறக்க முடியாது!
கசிந்துருகிக் கெஞ்சினாலும் இனி
உன் மனம் என் வசம் படியாது!

No comments: